தென்காசி மாவட்டம் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். சுரண்டை 9, 10, 11 ஆகிய வார்டுகளில் டெங்குவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை சுமார் 35 பேர் சுரண்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட சுகாதாரத் துறை அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச் 5) முதல் களப்பணியில் இறங்கியுள்ளனர்.
களப்பணி
முதற்கட்டமாக, வீடுகள்தோறும் சென்று தண்ணீரை எவ்வாறு மக்கள் பயன்படுத்திவருகின்றனர் எனச் சுகாதாரத் துறையினர் ஆய்வுசெய்தனர். டெங்கு பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
ஒரு சில வீடுகளில் தேக்கிவைத்த தண்ணீரில் புழு பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து அவை உடனடியாகச் சுத்தம்செய்யப்பட்டன.
இது தொடர்பாக, அரசு அலுவலர் வேங்கட கோபு கூறும்போது, "பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து டெங்குவை விரட்ட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:சூத்திரதாரி மோடியின் ஆட்டுவிப்பிற்கேற்ப இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஆடிகின்றனர் - சீத்தாராம் யெச்சூரி