தென்காசி: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (08.08.2023) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2022 - 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக விடுபட்டு போன குருவிகுளம் ஒன்றியத்தை, வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூபாய் 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குருவிகுளம் ஒன்றியத்தில் சராசரி நீர்மட்டத்தைவிட நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய்விட்டதால், குருவிகுளம் ஒன்றியத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டத் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் 60 வயதிற்குமேல் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
கறம்பை மண் அள்ள எளிமையான முறையில் அனுமதி பாஸ் வழங்க விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், மண்ணை பாழாக்கும் கண்ணாடி மது பாட்டில்களை நிறுத்தி பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின்கீழ், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவும், பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யவும், மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு 4,000 என விலை நிர்ணயம் செய்யவும் கேட்டுக்கொண்டனர்.
செண்பகவல்லி அணையின் உடைப்பை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்; பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மாவட்ட துணைத் தலைவர் ராகவன், சங்கரன்கோவில் தலைவர் வெள்ளத்துரை, திருவேங்கடம் தலைவர் ராமமூர்த்தி, சங்கரன்கோவில் செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர்கள் கணபதி, மாவட்ட தலைவர் வேணுகோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மற்றும் சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதியில் இருந்து ஏராளமான விவசாயப் பெருமக்களும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் தங்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குருவிகுளம் மற்றும் திருவேங்கடம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகளின் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு பாதுகாப்புப் பணிக்காக சங்கரன்கோவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.