தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. குற்றாலத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் ஆகும்.
இந்த சீசன் காலங்களில் குற்றால அருவிகளில் குளித்து, இதமான இயற்கை சூழலை ரசித்து செல்ல நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையக்கூடிய அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பல்வேறு விதமான பழ வகைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
ரம்ட்டான், மங்குஸ்தான், துரியன் பழம், முட்டை பழம், ஸ்டார் புரூட், பேரிச்சம் பழம், சீதாபழம் போன்ற பல்வேறு வகையான பழ வகைகளை விரும்பி வாங்கி செல்வார்கள்.
தற்போது கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் செல்வதற்கு தடை நீட்டிப்பதால், பழ வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், குற்றாலத்திற்கும் சுற்றால பயணிகள் வருகையை அனுமதிக்க வேண்டும் என இங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
பழங்களின் வரத்து இருந்தும் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் விற்பனையானது மந்தமாகவே உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு கிலோ ரம்ட்டான் பழம் 350 முதல் 400 ரூபாய்க்கும், மங்குஸ்தான் பழம் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதே போன்று பன்னீர் கொய்யா, சீதாப்பழம், சப்போட்டா போன்ற பழ வகைகளின் விலையும் கணிசமாக உள்ளது.
இதையும் படிங்க: காற்று பலமாய் வீசினால் காலி இடம்தான் மிஞ்சும் - அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்!