தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்திப்பெற்ற தலமான குற்றாலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கொடிமரத்தில் தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 11 வகை மூலிகை உள்ளடக்கி திருமுழுக்குச் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கடந்த 21ஆம் தேதி ஆருத்ரா தரிசன திருவிழாவிற்கு கொடியேற்றம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி அம்பாள், நடராஜ மூர்த்திக்கு சிறப்புத் திருமுழுக்குச் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றுவந்தது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (டிச. 30) அதிகாலை நடராஜ மூர்த்திக்கு சிறப்புத் திருமுழுக்குச் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு ஆனந்தபைரவி நாதஸ்வர இசையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
![குற்றாலநாதர் கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-courtallam-temple-festival-tn10038-hd_30122020080117_3012f_00059_296.jpg)
இந்நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குற்றாலத்தில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.