தென்காசி: இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளத்தைச் சேர்ந்தவர், வினித். இவர் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிருத்திகா வீட்டார் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வினித்துடன் இருந்த கிருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் வினித் அளித்த புகாரின் பேரில், கிருத்திகாவின் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கிருத்திகாவுக்கு குஜராத்தில் வைத்து அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அது மட்டுமல்லாமல், தான் பெற்றோரின் சம்மதத்துடன் மட்டுமே வினித்தை விட்டு வெளியேறி வந்ததாக ஒரு வீடியோவையும் கிருத்திகா வெளியிட்டார்.
இவ்வாறு நாளுக்கு நாள் பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்த இந்த விவகாரம், வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் வந்து நின்றது. வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா, தான் பெற்றோர் உடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருந்தது.
எனவே வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் காவல் துறையினர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது இது குறித்து புகார் அளித்த உடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தாமல், கிருத்திகா கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து, கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்ட குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் அலெக்ஸை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உறவினருடன் செல்ல இளம்பெண் கிருத்திகா விருப்பம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி