தென்காசி: இந்த ஆண்டு குற்றால சீசன் காலத்தில் தொடர் மழை இல்லாத காரணத்தால், குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பிரசித்த பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட ஏராளமான அருவிகளில் வருடந்தோறும் அருவியில் குளித்து மகிழ்வதற்காகவே மக்கள் குற்றாலத்தை நோக்கி படையெடுப்பது உண்டு. இந்த மாதம் தொடக்கத்தில் தொடர் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
தற்பொழுது ஒரு வார காலத்திற்கும் மேலாக சாரலுடன் கூடிய மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது. பகல் நேரங்கள் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் குளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் மாந்திரீக பயிற்சி! மாட்டிக் கொண்ட ஹெல்மெட் திருடன்!
குறிப்பாக, ஐந்தருவி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், அப்பகுதிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி குற்றாலம் மற்றும் ஐந்தருவி பகுதிகளுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து குளித்து வருகின்றனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவிக்கு செல்வதை விட, ஐந்தருவிப் பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல் துறையினரும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து முருகனின் வேல் திருட்டு..! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!