தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் கொடிக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி அருகே செந்தில்நாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்றிரவு (ஏப். 17) கண்டெய்னர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை (ஏப். 18) அவ்வழியாக வந்த திமுக நிர்வாகிகள் கண்டெய்னரை பார்த்தவுடன் மற்ற நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை சீரான முறையில் நடைபெற வேண்டும் எனவும், உடனடியாக கண்டெய்னர் வேறிடத்திற்கு மாற்றப்பட வேண்டுமெனவும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து கண்டெய்னர் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்டெய்னர் மாற்றப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, திமுகவினர் கலைந்துசென்றனர்.
மேலும் இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகாரளிக்கப்படும் எனவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'வேளச்சேரியில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நிறைவு'