தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியை புரிந்து கொள்வதற்காகவும், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பது குறித்தும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், தென்காசி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் முதல் குழந்தைகள் வரை கண்காணிப்பது அங்கன்வாடி பணியாளர்களே. எனவே அவர்களை தேர்வு செய்து சிறப்பு தேவையுடைய குழந்தைகளை கண்டறிவது தொடர்பான ஆலோசனைகளை இந்த முகாமில் வழங்கினோம்.
தென்காசி மாவட்டத்தில் நோய்தொற்றின் வேகம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. நாளொன்றுக்கு 20க்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக தனியார் கல்லூரியில் செயல்பட்ட தற்காலிக சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்போது செயல்படவில்லை. மாறாக அனைவருக்கும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சோதனை இன்றளவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் எல்லைப் பகுதிகளிலேயே சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பருவ மழை ஆரம்பித்ததன் காரணமாக அணைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலர் குளித்து வருகின்றனர். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.