கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ரவன சமுத்திரத்தில் இயங்கிவருகிறது. இதில் சுமார் 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சிறு சேமிப்பு, வைப்பு நிதி, நகைக்கடன், விவசாய கடன், உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களாக உறுப்பினர்கள் தமது கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை கேட்டு சென்றபோது கணக்கில் தொகை இல்லை என்று வங்கியில் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள் இதுகுறித்து பிற உறுப்பினர்களிடம் தகவல் கூறியதை அடுத்து பலரும் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று தங்களது கணக்குகளை சரி பார்த்தனர். அப்போது பலரது கணக்குகளில் பெரும் தொகைகள் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
ஒரு தனிநபர் 19 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையில் வைத்த நிலையில் அவரது வைப்புத்தொகை கணக்கே இல்லை என்று கூட்டுறவு கடன் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது சிறு சேமிப்பு கணக்கை சோதித்த போது அதிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயும் கணக்கில் இல்லாதது தெரியவந்தது.
இதுபோன்று பலரது கணக்குகளில் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுப்பினர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்து ஊழலில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி, செயலாளர் ஷாஜகான் மற்றும் தனி அலுவலர்கள் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்பப் பெற்று தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.