தென்காசி: மகாகவி பாரதியாரின் 125-வது ஆண்டு மணவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் செல்லம்மா பாரதி சிலை திறப்பு விழா, செல்லம்மா பாரதி கற்றல் மையம் திறப்பு விழா, சேவாலயாவின் 34 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு செல்லம்மா பாரதி கற்றல் மையத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செல்லம்மாள் பாரதி வெண்கல சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார். பின்னர் கற்றல் மைய கட்டடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி ஆட்சியர் ஆகாஷ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு பேசுகையில் ”தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு என அனைத்து மொழிகளிலும் புலமை பெற்றவர். மகாகவி பாரதி, தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் பாடல் பாடியவர். பாரதியை பெருமைப்படுத்தும் விதமாக தி.மு.க முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயப்புரத்தில் உள்ள அவரது வீட்டை நினைவு இல்லமாக்கினார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பாரதி நினைவு நாளை மகாகவி தினம் என்ற அழைக்க அறிவித்துள்ளார். என தெரிவித்தார்.”
மேலும் பேசிய அவர், “பாரதியார் பற்றிய சிறப்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளர்களுக்கு மூன்று லட்சம் பொற்கிளி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். அதேபோல் இங்கு சிலை நிறுவுவதற்கு பாடுபட்ட சேவாலயா நிறுவனர் முரளிதரனுக்கு பொற்கிளி வழங்குவதற்கு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மேலும் கடையம் தொடர்வண்டி நிலையத்தில் செல்லம்மாள் பாரதி பற்றிய விளம்பரங்கள், நூலகங்கள் போன்றவற்றை அமைப்பதற்கு முதல்வரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: தென் தமிழ்நாட்டில் கால் வைக்கும்போது உணர்ச்சிப் பெருக்கை உணர முடிகிறது - ஆளுநர் ரவி