தென்காசி மாவட்டம், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட கடையம் வனச்சரக பகுதியிலிருந்து கிராமங்களுக்குள் அவ்வப்போது கரடி, காட்டுப்பன்றி, மிளா, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன.அதிலும் குறிப்பாக கரடிகள் தொடர்ந்து கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களையும், வீட்டிற்குள் நுழைந்து பொருள்களையும் நாசப்படுத்தி வந்தன.
இதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து, வனத்துறையினர் கரடியைப் பிடிக்கக் கூண்டு அமைத்திருந்தனர். கடையம் வனச்சரகம், பங்களா குடியிருப்புப் பகுதியில் கரடியைப் பிடிக்க வைக்கப்பட்ட இந்தக் கூண்டில் நேற்று முன்தினம் கரடி ஒன்று சிக்கியது.
தொடர்ந்து அலுவலர்கள் அக்கரடியை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டுவந்த நிலையில், மீண்டும் கிராமத்திற்குள் அக்கரடி பகலில் நுழைந்ததை அடுத்து மீண்டும் அலுவலர்கள் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இருந்தபோதிலும் கரடியின் அட்டகாசம் தொடர்ந்ததை அடுத்து, கரடியைப் பிடிக்க வனத்துறையினர் மீண்டும் கூண்டு அமைத்து காத்திருந்து வந்தனர். இந்நிலையில், வனச்சரக அலுவலகத்திற்குள் வைத்திருந்த கூண்டில் நேற்று இரவு கரடி ஒன்று மீண்டும் சிக்கியது. இந்தக் கரடியை பாபநாசம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் பத்திரமாக விட்டு வந்தனர்.
இதையும் படிங்க : கானாவூரில் சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்