தென்காசி: குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்தன.
எட்டு மாதங்கள் கழித்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்றுமுதல் உரிய கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
குற்றாலம் பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள், 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள், 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றாலம் அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள், 10 பெண்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர்.
உடல் வெப்ப அளவைக் கணக்கிடுவதற்கு சுகாதாரத் துறை, பேரூராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி பேரருவியில் மலர் தூவினார். சபரிமலை சீசன் என்பதால் பொதுமக்களை விட ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குற்றாலம் அருவிகளில் குவிந்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அருவிகளைச் சுற்றி காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி வழக்கம்போல் நாள் முழுவதும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 கோடி ரூபாய் முறைகேடு..52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!