தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த மே 4ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் முடிதிருத்தும் கடைகள் மட்டும் செயல்பட அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுதும் ஊரகப் பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் கடைகள் மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. ஊரடங்கால் இரண்டு மாதங்களாக வருவாய் இல்லாமல் தவித்த முடிதிருத்தும் தொழிலாளர்கள், அரசின் இந்த உத்தரவால் மகிழ்ச்சியடைந்தனர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா பீதி காரணமாக தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து கைகளில் உறைகளை அணிந்தும் பாதுகாப்புடன் வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடைகளைத் திறக்க அனுமதியளித்தும் வாடிக்கையாளர்கள் போதியளவு வராததால் தொழிலாளர்கள் தொடர்ந்து வேதனையில் உள்ளனர். இது குறித்து மேலப்பாவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் கூறுகையில், 'செய்தித்தாள்களைப் பார்த்து கடையைத் திறக்கலாம் என்று தெரிந்து கொண்டோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று கடையைத் திறந்தோம். ஆனாலும், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரவில்லை.
ஏற்கெனவே 56 நாள்கள் கடையைத் திறக்காமல் வருவாய் இல்லாமல் இருக்கிறோம். தற்போது கடையைத் திறந்த பிறகும் வருவாய் கிடைக்க வில்லை. இது குறித்து நாங்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால், எங்களுக்கு அரசின் உதவித் தொகையும் கிடைக்கவில்லை' என வேதனைத் தெரிவித்தார். தொழிலாளர்களின் கருத்தை ஆராய்ந்து பார்க்கும்போது பொதுமக்கள் கரோனா பீதியில் தான் முடிதிருத்தும் கடைகளுக்குச் செல்ல அச்சப்படுவதாகத் தெரிய வருகிறது.
அதாவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் முடிதிருத்தும் கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதியளிக்காமல் இருந்ததால், அந்தக் கடைகள் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவே பொதுமக்களின் மனநிலை உள்ளது. எனவே அதன் காரணமாகத்தான் பொதுமக்கள் அச்சப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய முடிதிருத்தும் தொழிலாளர்கள்!