தென்காசி: கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியைச்சேர்ந்த மாணவி தர்ஷினி, மாதவன் ஆதிகேசவன், பிரபு ஆகியோர் சேந்தமரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மூன்று பேரும் தேர்ச்சிப்பெற்றனர். மேலும், தேர்ச்சி பெற்ற மூன்று பேரும் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிப்பதற்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து சேர்ந்தமரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு விழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்களுக்கு மருத்துவர் பயன்படுத்தும் ஸ்டாதாஸ்கோப் மற்றும் வெள்ளை சட்டை ஆகியவைகளை தலைமை ஆசிரியர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து மாணவி தர்ஷினி பேசுகையில், “நான் சிறுவயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்தேன். எனக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் எனக்குப்பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றி” என்றார்.
பாராட்டு விழாவில் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்களையும் கைத்தட்டி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் மாணவி தர்ஷினியை கையைப் பிடித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
மாணவி தர்ஷினிக்கு சக மாணவர்கள் அளித்த வரவேற்பு, அங்கு இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. மேலும் தன்னைப்போல் இன்னும் ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற கடுமையாகப்படிக்க வேண்டும் என மாணவி தர்ஷினி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை