வேளாண்மைக்கு அடுத்தபடி பீடித்தொழில் முதன்மையான தொழிலாக விளங்கிவரும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பீடித்தொழிலாளர்கள் உள்ளனர்.
குறிப்பாக லட்சக்கணக்கான பெண்கள், அவர்கள் சார்ந்த குடும்பத்தினர் பீடித்தொழிலை நம்பி குடும்பம் நடத்திவருகின்றனர். மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பீடி நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் கரோனோ ஊரடங்கால் இரண்டு மாதங்களாக பீடித்தொழில் முடங்கியது. இதனால் வருவாய் இல்லாமல் அப்பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்தனர்.
இது தொடர்பாக பீடித் தொழிற்சங்கத்தினரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை-வைத்துவந்தனர் இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பீடித் தொழிலாளர்களிடம் இரண்டாயிரம் ரூபாய நிவாரணம் வாங்கித்தருவதாகச் சிலர் பணம் பறித்துவருகின்றனர்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பீடித் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் வழங்கப்படுகிறது. எனவே தொழிலாளர்கள் தங்களின் ஆதார் எண், அடையாள அட்டை எண், வங்கி எண் ஆகியவற்றை குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு அனுப்பும்படி தகவல்கள் உலாவந்தன.
இது குறித்து அலுவலர்களிடம் விசாரித்தபோது, "மத்திய அரசு பீடித்தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்துவருகிறது.
எனவே நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பீடி நிறுவனங்களில் எவ்வளவு தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர் என்ற விவரங்களை அறிவிக்க மத்திய அரசு கேட்டுள்ளது, அதனடிப்படையில் பீடித் தொழிலாளர் நல ஆணையம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பீடித் தொழிலாளர்களின் விவரங்களை கணக்கெடுத்துவருகிறது" என்றார்.
இதற்கிடையில் உடனடியாக அரசு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் தருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை நம்பி மக்கள் சமூகவலைதள மையம், சில தரகர்களிடம் பணத்தைச் செலவுசெய்து தங்கள் விவரங்களை அனுப்பிவருகின்றனர். ஏற்கனவே வேலையிழந்து தவித்துவரும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து தென்காசி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் வேல்முருகன் கூறுகையில், "பீடித்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தொழிற்சங்கம் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவந்தோம். அதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது.
மேலும் தொழிலாளர் நல ஆணையம் மூலம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. எனவே மாநிலம் முழுவதும் தொழிலாளர்களின் விவரங்களைத் திரட்ட அரசு அலுவலர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி பீடித்தொழிலாளர் விவரங்களை மருத்துவர்கள் மூலம் சேகரிக்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் பொதுவாக விவரம் என்று கேட்டால் பொதுமக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் உடனடியாக ரூ. 2000 நிவாரணம் தருவதாகப் பொய்யான தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதை நம்பி தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு முறையாக ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!