தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக 6ஆம் கட்ட ஊரடங்கு ஜீலை 31ஆம் தேதி வரை சில கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகளுடன் தமிழ்நாடு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 453 பேர் பாதிக்கப்பட்டும், இதில் 301 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என வீடுகளில் 9 ஆயிரத்திற்க்கு மேற்பட்டவர்களும் அரசு முகாம்களில் 800-க்கும் மேற்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கரோனா அச்சம் காரணமாக செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.