தென்காசி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. தற்போது தான், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் தத்தளித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
அதற்குள்ளாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று (டிச 17) முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இன்று (டிச.18) ரயில்கள், பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலம் உச்சி மலைப் பகுதியில் அதிகப்படியான விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை நீடித்துவரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விதமான விவசாய நிலத்திற்கு உள்ளாகத் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மக்காச்சோளம், நெற்பயிர்கள் மற்றும் பல்வேறு விதமான பயிர் வகைகளை நடவு செய்துள்ள விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட தென்னைமரக் கண்டுகளை பிடுங்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளன.
மேலும், தென் மாவட்டங்களில் தற்போது கனமழை அதிகப்படியாக நீடித்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் நிலை பெரிதும் கவலைக்கிடமாக மாறும் நிலை காணப்படுகிறது.
தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகிரி, வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் குளத்தின் அருகே உள்ள வயல்வெளிகளில் ஏராளமான தண்ணீர் உட்புகுந்து நெல் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், மழை மற்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியது போன்ற காரணங்களால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவியில் வரலாறு காணாத வெள்ளம்..!