தென்காசி: தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்யும் பணி நிறைவடைந்தது. தற்போது அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட 32 வார்டுகளிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பரப்புரைப் பணி சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் புளியங்குடி 32ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனியார் பள்ளி ஆசிரியை சிவமதி வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிமுக வேட்பாளரான சிவமதிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 32ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரேவதியை நேரில் சந்தித்து அதிமுக வேட்பாளர் சிவமதி தனக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே ரேவதியும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், இதையடுத்து ஒருவருக்கொருவர் சிறிது நேரம் சிரித்துக்கொண்டனர்.
ஒரே வார்டில் போட்டியிடும் இந்த இருவரும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்துக்கொண்டு ஓட்டு கேட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு வேட்பாளர்களும் பள்ளிப்பருவத்திலிருந்து சிறந்த தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புளியங்குடி பகுதியில் நகர்ப்புறத் தேர்தலில் இதுவரை அதிமுக தோற்றதே இல்லை என்பதால் அதிமுக வேட்பாளர்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதலுக்கு அனுமதி இல்லை