தென்காசி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த சாதனைகளில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறது. சமீபத்தில் இதுவரை யாரும் கண்டிராத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான் - 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாறு சாதனை படைத்த இஸ்ரோ, அதன் தொடர்ச்சியாகச் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆதித்யா எல்-1 திட்டத்திலும் வெற்றி முகம் பதித்து ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இப்படி, இஸ்ரோ செயல்படுத்தும் அனைத்து திட்டங்களில் வெற்றித் தடம் பதித்து வருகிறது. அந்த வகையில் சந்திரயான் -1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா, சந்திரயான் -2 திட்டத்தில் சிவன், சந்திரயான் - 3யின் திட்டத்தில் வீர முத்துவேல், ஆதித்யா எல்-1 திட்டத்தில் நிகர் ஷாஜி என இஸ்ரோவின் பயணங்களில் தமிழர்களின் பங்கு கையோங்கியுள்ளது தமிழர்களைப் பெருமையடையச் செய்துள்ளது.
இந்தப் பயணத்தை மேற்கொண்டு வளர்க்கவும், வளர்ந்துவரும் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் அறிவுக் கல்வியுடன் அறிவியல் செயல்முறைகளின் வளர்ச்சிகளும் விஞ்ஞானிகள் அடித்தளமிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆரியநல்லூர் பகுதியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநரான நிகர் ஷாஜி படித்த அரசு தொடக்கப்பள்ளி மற்றும் SRM அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றில் அறிவியல் ஆய்வு கூட கட்டிடம் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான நிதியுதவியைச் செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குக் கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர்ஜாஜி சார்பில் ரூபாய் 9.50 லட்சத்திற்கான காசோலையை நிகர் ஜாஜியின் சார்பில் அவரது சகோதரர் சேக்சலீம் செங்கோட்டை நகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், தற்போது நிகர் ஜாஜியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ரூபாய் 11 லட்சம் நிதியுடன், 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வசதிகள் குறைவால் தவித்துவரும் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள் மற்றும் வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!