தென்காசி: கேரளா மாநிலத்தில் ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன் கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10ம் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான மகோற்சவ திருவிழா நாளை முதல் கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்களுடன் இடத்திற்கு இடம் எடை மாறும் தங்க வாள் இருக்கும். இந்த ஆபரண பெட்டியைத் தரிசனம் செய்வது, ஐயப்பனையே நேரில் பார்ப்பது போல என பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில், இன்று புனலூர் அரசுக் கருவூலத்திலிருந்து அச்சன் கோயில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஆபரணங்கள் எடுத்துவரப்பட்டு புனலூர் பார்த்தசாரதி ஆலயத்தில் வைத்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக அங்குப் பொதுமக்களின் தரிசனத்திற்குப் பின்பு ஆபரணப் பெட்டிகள் அச்சன் கோயில் ஐயப்பன் கோயிலுக்கும், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரும் பணி தொடங்கியது.
இந்த ஆபரண பெட்டியை ஆரியங்காவு, புளியரை, காலங்கரை, செங்கோட்டை, தென்காசி பன்பொழி வழியாக மேக்கரைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். வழிநெடுகிலும் அச்சன்கோயில் ஆபரண பெட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்ட நிலையில் தென்காசி வந்த ஆபரண பெட்டிக்கு காசிவிஸ்வநதர் கோயில் முன்பு பக்தர்களால் சங்கு முழங்க மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆபரண பெட்டி வருகைக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷங்களுடன் ஆபரண பெட்டியை வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திரு ஆபரண பெட்டி வரவேற்பு குழு செய்து குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு கோயில் முன்பு அதிக அளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் ஆபரணப் பெட்டியைத் தரிசனம் செய்த பின்னர் அச்சன் கோயிலுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்...