தென்காசி: உலகளவில் பல வகையான சுவைகளில் உணவுகள் இருந்தாலும், பிரியாணிக்கு இருக்கும் மவுசு என்றுமே தனிதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மிகவும் பிரியமான உணவாகத்தான் இந்த பிரியாணி வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே பிரியாணியைச் சாப்பிடப் பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் விருப்பமான பிரியாணி கடையாக இருந்து வருகிறது தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை தலப்பாகட்டு ஹரி பிரியாணி கடை. 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கடை ஆரம்பத்தில் தள்ளுவண்டிக் கடையாகத்தான் ஆரம்பமானது.
தற்போது தென்காசி, சாம்பவர்வடகரை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில் என 5 இடங்களில் தனது கிளையை நிறுவியுள்ளது. 7 ஆண்டுகளில் இத்தகைய முன்னேற்றத்தை அடைந்து சுயதொழில் செய்யவேண்டும் என்று முயற்சிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார் இந்த பிரியாணி கடையின் உரிமையாளர் ஹரி.
இது குறித்து ஹரியிடம் கேட்டபோது, "ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் சென்னை எழிலகம் அருகில் உள்ள சாதாரண டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் டீ, வடை, ஃப்ரைட் ரைஸ், பிரியாணி உள்ளிட்டவற்றைச் செய்யக் கற்றுக்கொண்டு எனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் தள்ளு வண்டியில் எனது ஊர் பெயரிலேயே சாம்பவர்வடகரை தலப்பாகட்டு ஹரி பிரியாணி கடை என்று 2017 ம் ஆண்டு ஆரம்பித்தேன்.
ஆரம்ப காலகட்டத்தில் சிலர், நகரத்து வாசிகள் விரும்பும் பிரியாணி கடையைக் கிராமத்தில் ஆரம்பிக்கிறாய் வெற்றி பெறுவது சிரமம் என கூறினார்கள். வாடிக்கையாளர்களுக்குத் தரத்திலும் அளவிலும் எந்த குறையும் இல்லாமல் நாம் உணவை வழங்கினால் கண்டிப்பாக வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் நான் எனது கடையைத் தொடர்ந்து நடத்தினேன்.
எனது உழைப்புக்கேற்ற முக்கியத்துவம் கிடைக்கப்பெற்று, தொடர்ந்து அடுத்தடுத்த நகர்வுக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். மேலும் எனது தொழில் தற்பொழுது அதிகப்படியான இடங்களில் நிறுவுவதற்கு எனது குடும்பம் ஒரு முக்கிய பங்காகவும் அதேபோல் எனது கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் எனக்கு உறுதுணையாக இருந்ததால் இந்த பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
நான் ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் கல்வி என்பது நமது அடிப்படை அறிவை பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே. ஒரு தொழிலை கற்றுக் கொண்டு தனக்குத் தேவையான முதலீட்டை தானே சம்பாதித்து தொழிலைத் தொடங்கினால் நமக்கு முன் முன்னேறியவர்களின் தொழில் பக்தியைக் கருத்தில் கொண்டு பயிற்சியுடன் கூடிய முயற்சி இருந்தால் நமது முன்னேற்றம் நம் கையிலே" என்று கூறினார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் பாலஸ்தீன போர் தாக்குதல் - உலகத் தலைவர்கள் கருத்து!