தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலைய பகுதியில் ஏராளமான நரிக்குறவர்கள் தற்காலிகமாக நடைபாதைக் கடைகள் வைத்து பாசி, ஊசி, சீப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர். இந்நிலையில் பட்டப்பகலில் காவலர் ஒருவர் அங்குள்ள நரிக்குறவர் பெண்களிடம், பணம் கொடுக்கிறேன் என்னுடன் வா என்று போதையில் தவறாக நடந்துகொண்டார்.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் அவரைத் தடுத்துள்ளனர். 'நான் போலீஸ் என்னையவே மிரட்டுகிறாயா' என்று லத்தியை வைத்து அடித்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள், நரிக்குறவர்கள் அவரைப்பிடித்து அடி உதை கொடுத்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் காவலர் எனத் தெரிந்ததும், அவரைப் பேருந்தில் ஏற்றி தப்பிக்கவைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் விசாரித்ததில் சங்கரன்கோவிலில் உள்ள சில்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் மணிமுத்தாறு பட்டாலியன் காவலராகப் பணியாற்றிவருகிறார் என்பதும் தெரியவந்தது.
சக மனிதன் தவறு செய்தால் தண்டிக்கும் காவல் துறையினர், ஒரு காவலரே நரிக்குறவ சமூக பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது தெரிந்தும், காவல் துறையினர் அவரைத் தண்டிக்காமல் தப்பிக்கவைத்துள்ளனர். இச்சம்பவம் காவல் துறையினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு