தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகம் பகுதியில் காட்டுப்பன்றி, கரடி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தியதோடு, அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தன. அம்பாசமுத்திரம் அருகேயுள்ள முதலியார்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கூட்டமாக வரும் கரடிகள் சப்போட்டா, மா, தென்னை, நெல்லி உள்ளிட்டவற்றை நாசப்படுத்தியது.
இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்து வந்தனர். கரடிகளை பிடிக்க வேண்டுமென வனத்துறையிடம் புகாரும் அளித்தனர். அதனடிப்படையில், வனத்துறையினர் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுவரை 5 கரடிகள் பிடிபட்ட நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்தக் கூண்டில் மேலும் ஒரு கரடி சிக்கியது. இந்தத் தோட்டத்தில் பிடிபட்ட 6ஆவது கரடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தோட்டக் காவலர் கூறுகையில், இந்தத் தோட்டத்தில் 2 ஏக்கருக்கு மேல் சப்போட்டா பயிரிட்டுள்ளோம். மா, நெல்லி, தென்னையும் உள்ளன. இப்போது சப்போட்டா விளைச்சல் உள்ளதால் அந்த வாடைக்குக் கரடிகள் கூட்டமாக தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி செல்லும். தற்போது பிடிபட்ட கரடி போன்று மேலும் கரடிகள் பிடிபட வனத்துறையினர் உதவி செய்ய வேண்டும் என்றார்.
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை அதிகமாக சிறுத்தைகள் பிடிபட்டு வந்த நிலையில் 70 நாள்களில் 10 கரடிகள் பிடிபட்டுள்ளன. இந்தத் தனியார் தோட்டத்தில் மட்டும் 50 நாள்களில் 6 கரடிகள் பிடிபட்டுள்ளன.
இதையும் படிங்க: புதுச்சேரி பட்ஜெட் காலதாமதத்திற்கு நான் பொறுப்பல்ல - ஆளுநர் கிரண்பேடி