தென்காசி: கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் பார்த்தசாரதி. இவர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், ”தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அங்கு வேலை முடிந்த நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பி, ஊரில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்த நிலையில் தன்னை செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோமு என்பவரது மகனான பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்புகொண்டார். அப்போது அவர் தான் போலீஸ் போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், தற்போது தமிழக சி.பி.சி.ஐ.டி காவல் துறையில் புதிதாக நுண்ணறிவு உளவுப் பிரிவு ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கு தற்போது ஆள் சேர்ப்பு பணியானது நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, தனக்கு ஐஜி அன்பு, பரசுராம், வெற்றிவேல் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் நெருக்கமானவர்கள் எனவும், அவர்கள் மூலம் உங்களை அந்த பணியில் சேர்த்து விடுகிறேன் எனவும்கூறி, சிறுகச் சிறுக ரூ.40 லட்சம் பணத்தைப் பெற்றார். இந்நிலையில், வேலை என்ன ஆச்சு என நான் கேட்கும்போது இன்னும் ஒரு வாரத்தில் ரெடி ஆகிவிடும் எனக் கூறி, ஒரு வாரத்தில் தன்னை அழைத்து சிபிசிஐடி உளவுப் பிரிவில் சார்பு ஆய்வாளராக தன்னை நியமித்துள்ளதாகக் கூறி, ஒரு பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.
இதையும் படிங்க:காவல் நிலையத்தில் அடிதடி: கவுன்சிலரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள் - நடந்தது என்ன?
அந்தப் பணி நியமன ஆணையை தனக்குத் தெரிந்த ஒருவரிடம் காட்டியபோது, அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மறுபடியும் பாலகிருஷ்ணனை நான் அணுகி கேட்டபோது என்னை மிரட்டும் தொனியில் பேசினார்.
பின்னர், நான் என் குடும்பத்துடன் சென்று என் பணத்தைக் கேட்டபோது தனக்கு மிரட்டல் விடுத்த நிலையில் பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித் தர முடியாது எனக்கூறி என்னை மிரட்டினார்” என அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பார்த்தசாரதியை ஏமாற்றிய நபர் பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பதும்; அவர் செங்கோட்டை நகர முன்னாள் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பார்த்தசாரதியிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததும் உறுதியானது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது பாலகிருஷ்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தமிழக காவல்துறையில் உள்ள சிபிசிஐடி பிரிவில் புதியதாக உளவுப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக கூறி அதற்குப் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ. 40 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:International yoga day: 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய சிறுமி