தென்காசி: வாசுதேவநல்லூர் புதுமனை 3-வது தெருவைச் சேர்ந்தவர், மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவண்ணன் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றார்.
நேற்றிரவு அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 102 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர். மணிவண்ணன் வெளியூருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகிறார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் பகுதியில் ஆய்வு செய்த போது தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் கை
வரிசை காட்டிய திருடர்கள், யாரும் இல்லாத நேரமாக பார்த்து ஒவ்வொரு வீடுகளில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் மாரியப்பன் என்ற நபர் வீட்டில் திருடச்சென்ற நபர் எந்தவிதமான பொருள்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய மர்மநபர்கள் கடைசியாக தொழில் அதிபர் வீட்டிற்குச்சென்று சுமார் 102 சவரன் நகைகளும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றுள்ளார்.
மேலும் அந்தப் பகுதி முழுவதும் எந்த விதமான சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் திருடன் திருடி செல்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. மேலும் யாரும் இல்லாத நேரம் பார்த்து திருடிச் சென்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களைப் பிடிக்க வாசுதேவநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : தேனியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தம்பதி எஸ்கேப்!