சிவகங்கை: இளையான்குடியை அடுத்துள்ள இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா. இவரது கணவர் பெயர் ராஜா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோகிலா தனது வீட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், கோகிலாவிற்கும் அவரது சகோதரர் காசிநாததுரைக்கும் இடையே சொத்துத் தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோகிலா, தனது சகோதரர் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கோகிலாவின் சகோதரர் காசிநாததுரை திருவாடானை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிவதால் அவர் மீது இளையான்குடி காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோகிலா குற்றஞ்சாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 31) சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த கோகிலா, அலுவலக வாயிலில் தான் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்குப் பணியிலிருந்த காவல் துறையினர், உடனடியாக அவரைத் தடுத்து, அவரது உடலில் நீரை ஊற்றிக் காப்பாற்றியதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: WATCH: போதையில் வீடியோ எடுத்தவரை முட்டித்தூக்கிய காட்டெருமை