சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் சிக்கலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தன்னார்வ அமைப்புகள், இயக்கங்கள், சமூக ஆய்வாளர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மே 15) காரைக்குடி நகராட்சி அரசு மருத்துவமனைக்கு தமிழக மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்கள் பங்களிப்பில் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், மகிழ்ச்சி புரோமோட்டார்ஸ் நிறுவனர் சிவகுமார் 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், கற்பகமூர்த்தி மோட்டார்ஸ் நிறுவனர் கணேசன் 1 ஆக்ஸிஜன் செறிவூட்டி என மொத்தம் 6 செறிவூட்டுகள் நகராட்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. மேலும், 4 ஆக்ஸிஜன் இயந்திரங்கள் விரைவில் வழங்க இருப்பதாக தமிழக மக்கள் மன்றத்தின் தலைவர் ச.மீ.ராசகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியா முழுவதும் ரயில் மூலம் 8,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சென்றது' - இந்தியன் ரயில்வே