கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 211 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
பட்டா மனை வழங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த இடத்தை இதுவரை வருவாய்த்துறை அலுவலர்கள் அளந்து கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உளுந்தூர்பேட்டையில் வீட்டுமனை பட்டா பெற்ற சுமார் 200க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கீழே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமூக முடிவு கிடைக்காததால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'நாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும்... அதுக்கு ஊரில் தேரும்தான் ஓட வேணும்!'