சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஒய்யவந்தான் பேச்சாத்தக்குடியில், சுமார் 2,500ன் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் அளவிலான நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு, கால்வாய் போன்றவையே நீர் ஆதாரமாக உள்ளன.
முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்துள்ள இப்பகுதியில் மண் குவாரி அமைப்பதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரத்துக்கால்வாயை தூர்த்து, குவாரிக்கு பாதை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் கூறியும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற ஒய்யவந்தான் கிராம மக்கள், குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், இரண்டு நாட்களில் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டைகளை அளித்துவிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.