சிவகங்கை: சங்கமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களான நித்தீஷ் மற்றும் சுபஸ்ரீ ஆகிய இரு மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் போது, பள்ளியின் முகப்பில் இருந்த மேற்கூரையின் சிலாப் இடிந்து விழுந்தது.
இதனால் பள்ளி மாணவர்களின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இதில் நித்திஷ் என்ற மாணவருக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. சுபஸ்ரீயின் கை மற்றும் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக பள்ளியின் ஆசிரியர்கள், காயமடைந்த மாணவர்களைச் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இப்பள்ளியில் மேலும் சில கட்டடங்களும் இடியும் நிலையில் உள்ளன. அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுவர் முகப்பு இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'இந்தப்பக்கம் கருணாநிதி; அந்தப்பக்கம் ஸ்டாலின்' - நகல் மனிதர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக நிர்வாகி!