சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் வீரச்சாமி மகன் சதீஸ், முத்து மகன் சதீஸ். இவர்கள் இருவரும் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து மொபைல்ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீரச்சாமி மகன் சதீஸ், முத்து மகன் சதீஸ் ஆகிய இருவரையும் ஆயுதங்களால் தாக்கி விட்டுத் தப்பியோடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை நிறுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். இதனால் மானாமதுரையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.