சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை பார்வையிடுவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கீழடி முதலாம் கட்ட அகழாய்வில் உறை கிணறுகளும், இரண்டாம் கட்ட அகழாய்வில் மிகப்பெரிய தொழிற்கூடம் இருந்ததற்கான கட்டமைப்புகளும் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட அளவில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று மத்திய தொல்லியல் துறை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் நீர்ப் பாசனத்திற்காக கட்டமைப்பு வசதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய அரசால் நடத்தப்பட்ட மூன்று கட்ட அகழாய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசு இதுவரை நடைபெற்ற 5 கட்ட அகழாய்வு அறிக்கைகளையும் பெற்று முழுவதுமாக வெளியிட வேண்டும். அதேபோன்று கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை; அதனையும் வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தொல்லியல் துறையின் ஒத்துழைப்பைக் காரணம் காட்டி, தமிழ்நாடு அரசு அகழாய்வுப் பணிகளை தொடராமல் இருக்கக் கூடாது. கீழடி பகுதியிலேயே அகழாய்வு செய்யக்கூடிய 110 ஏக்கர் நிலப் பகுதி உள்ளது. இவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசே முன்வந்து செய்ய வேண்டும். அதே போன்று மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து ஆறாம் கட்ட அகழாய்வை, மேற்கொள்ளும் முடிவை எச்சரிக்கையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் பட்டணம் அகழாய்வுகளும் மதவாத சக்திகளால் எப்படி தடுக்கப்பட்டதோ... அதுபோன்ற நிலை கீழடிக்கும் நேர்ந்து விடக்கூடாது.
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடியில் மதமோ, சாதியமும் இல்லாத நல்லிணக்க சமூகமே தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. ஆகையால் இது முழுவதும் தமிழர் நாகரிகமே" என்றார்.
இதையும் படிங்க: 'திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்' - தொல். திருமாவளவன்