சிவகங்கை: திருபுவனம் அருகே லாடனேந்தல் வேலம்மாள் தனியார் பள்ளியில் நீட் தேர்வு நடந்து வருகிறது. இங்கு தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 480 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கு முன்பே தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நுழைய அனுமதி தடை செய்யப்பட்டிருந்தது.
உணர்வுப் பூர்வமான ஆபரணங்களுக்கு விதிவிலக்கு?
ஆவணங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னர், மாணவிகளின் கம்மல், தாலி, மோதிரம் உள்பட அனைத்து ஆபரணங்களையும் கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது புதிதாக திருமணம் முடிந்த மாணவி, தனது கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு கண்கலங்கியபடியே தேர்வு மையத்துக்குள் நுழைந்தார்.
இதுகுறித்து நீட்தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “நீட் தேர்வு எழுதுவோரில் பெரும்பாலானோர் மாநில மொழிகளில் பயின்றவர்களே. ஆனால் சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்த மாணவர்களுக்குதான் தேர்வு எளிதாக இருக்கும் என கூறுகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிக மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும். தாலி போன்ற உணர்வுப்பூர்வமான ஆபரணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வெழுத வந்த மாணவனின் தந்தைக்கு நேர்ந்த துயரம்