கீழடி: பள்ளிச் சந்தை திடலில் 2015ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. முதல் மூன்று கட்ட பணிகளை ஒன்றிய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறை மேற்கொண்டன. அதன்பின்னர், கீழடியும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி 4,5, 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டது.
இதில், கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒன்றிய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு அனுமதியுடன், 2021 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியது.
கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் 7 மாதங்கள், அதாவது செப்டம்பர் 30 வரை நடைபெற்ற அகழாய்வுப் பணியில் அகரத்தில் 8 குழிகள், மணலூரில் 3 குழிகள், கொந்தகையில் 5 குழிகள், கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
இதில், சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், தந்தத்தினாலான பகடை, உருவ பொம்மைகள், வளையல்கள், காதணிகள், முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய புழங்குப் பொருட்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேற்கண்ட தொல்பொருட்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அகழாய்வு மேற்கொண்ட இடங்கள் இன்னும் மூடப்படவில்லை.
இதேபோன்று, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்களை அதே பகுதியில் காட்சிபடுத்தும் வகையில் ரூ.13 கோடி மதிப்பில் உலக தரத்திலான அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழடி அகழாய்வுத் தளங்கள் மற்றும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.29) ஆய்வு செய்தார்.
கீழடி அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதலமைச்சருக்கு விளக்கினர். அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கீதா ஜீவன், மூர்த்தி, கேகேஎஸ்எஸ்.ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:’ரஜினிகாந்த் சில நாள்களில் வீடு திரும்புவார்’ - காவேரி மருத்துவமனை அறிக்கை