சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் செயற்கைகோள் மாதிரி வடிவமைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிக்கம் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மூன்றாயிரத்து 290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இடம் பெற்றுள்ள லேண்டர் கருவிக்கு விக்ரம் என்றும், ரோவர் கருவிக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும். விண்கலத்தில் உள்ள நவீன முப்பரிமாண கேமராக்கள் தேவையான படங்களை எடுத்து அனுப்ப இருக்கின்றன. நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-2 செல்வது அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.
பெண்கள் திட்ட இயக்குனராக செயல்பட்டு வெற்றிகரமாக செலுத்திய விண்கலம் என்பது கூடுதல் சிறப்பு. விடா முயற்சியுடன் இந்த சாதனையை வெற்றி பெற செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டுகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.