கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் மே 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் நகர் பகுதியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு பின்னர், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவிக்குமாறும் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் நினைவு சின்னம் அமைத்திடுமாறும் தமிழ்நாடு அரசிற்குஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.