சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள விளங்குடி கிராமத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
இதற்காக கிராம பெரியவர்கள் சார்பில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், அவரை வரவேற்க விளங்குடி கிராமத்தினர் சார்பில் கோயில் அருகே ஐந்துக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்ற முந்தைய நாள் இரவு, அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பேனர்களைக் கிழித்து எறிந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம பெரியவர்கள், அவற்றை அப்புறப்படுத்திவிட்டு கும்பாபிஷேகத்தை நடத்திமுடித்துடன் விழாவிற்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமியை வரவேற்று இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, பேனர்களை கிழித்த நபர் யார் என்று விசாரிக்க கிராமக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பேனர்களைக் கிழித்தவர்கள் யார் என்று கண்டறியப்படாத நிலையில், கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவர் வீதம் காளையார்கோவில் அடுத்துள்ள கொல்லங்குடி காளி கோவிலுக்கு சென்று "பிளக்ஸ் பேனரைக் கிழிக்கவில்லை" என கூறி சத்தியம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று கோயிலுக்குச் சென்ற கிரமத்தினர், சாமி சன்னதியின் முன்பு சூடத்தை ஏற்றி ஒவ்வொருவராக அடித்து சத்தியம் செய்தனர். இந்த விநோத நம்பிக்கை பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.