சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து, தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ' தினசரி ஆயிரம் லிட்டர் அளவிலான ஆக்ஸிஜன், இந்நிலையத்தில் தயாரிக்கப்படும் நிலையில், இனித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
கரோனா இரண்டாம் அலையின்போது தமிழ்நாடு தவிர, பிற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் பிரச்னையைச் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் இயற்கையாக கிடைக்கக்கூடிய காற்றிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இனி ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை' எனத்தெரிவித்தார்.