இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், கார்த்தி சிதம்பரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், 'இந்தியாவில் குடியிருக்கு அனைத்து குடிமக்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நாள் இது. தற்போதைய அரசியல் சூழலில் அம்பேத்கர் எழுதிய ஒப்பற்ற அரசியல் சாசனத்திற்கு பெரிய அச்சுறுத்தலும் தாக்குதலும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான அரசின் மூலமாக வந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் இருந்து மத்திய புலனாய்வு அமைப்பு வரை அத்தனை இயக்கங்களையும் அழித்து, ஒழித்துக் கொண்டிருக்கின்ற இந்த பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக அரசால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை, சோனியாவை கொச்சைப்படுத்தி பேசுகிறார். இந்தியாவில் உள்ள அத்தனை உரிமைகளை பெற்ற இந்திய குடிமகன், இந்திய மக்கள் சட்ட ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.