சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்கு பிறகு பெய்யும் முதல் மழை அந்தாண்டின் புதுமழை மற்றும் உத்தமழை என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை துவங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதி இப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமத்தினர் 'பொன் ஏர்' பூட்டும் நிகழ்வை முடிவு செய்து நல்ல நாள் நல்ல நேரம் குறித்தனர். அதன்படி நேற்று காலை சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில் அக்கோயில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாய பணிகளை துவங்கினர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் தன்னாயிரம் முன்னிலையில் கிராமத்தார்கள் கோயில் பணியாளர்கள் கோயில் நிலத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரும் ஏர் பிடித்து 'பொன் ஏர்' பூட்டும் விழாவை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அவரவர் குல தெய்வங்களை வழிபாடு செய்து 'பொன் ஏர்' விழாவை நடத்தினர். இப்படி சித்திரையில் புதுமழைக்குப் பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது சமூக ஒற்றுமைக்கும், நல்ல மழை பொழிந்து, நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு இன்றும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் கிராம விவசாயிகள் ஜாதிமத பேதமின்றி ஒன்று கூடி ஒற்றுமையாக 'பொன் ஏர்' பிடித்து விவசாய நிலங்களை உழுது தங்களது இந்த வருட விவசாய பணிகளை துவங்கினர். இதை சித்திர மேழி வைபவம் மற்றும் 'பொன் ஏர்' திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் வருடத்தில் முதல் மழைக்கு பிறகு 'பொன் ஏர்' பூட்டி உழுவதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க நம்பிக்கையாகும்.
இதையும் படிங்க: கேரளா வந்தே பாரத் ரயிலில் கொட்டித் தீர்த்த கனமழை! பயணிகள் அதிர்ச்சி!