சிவகங்கை: நேருபஜார் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களை பள்ளியை சுத்தம் செய்யும் பணியிலோ, வேறு இதர பணியிலோ ஈடுபடுத்தக்கூடாது எனவும்; மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பள்ளியில் சுற்றறிக்கையை மீறும் வகையில் பள்ளி மாணவர்களைக்கொண்டு பள்ளியின் வாயிலில் உள்ள கழிவு நீர் கால்வாயை சரி செய்யும் பணியை மேற்கொண்டதுடன், அதனை சுத்தம் செய்யும் பணியிலும் ஆசிரியர்கள் மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
அதேபோல் மாணவிகளிடம் துடைப்பத்தை கொடுத்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவ, மாணவியர்களை இதுபோல் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தாமல் இருக்கு பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்