சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அடுத்த திருவேகமபத்தூர் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள், விசாரணை மேற்கொண்டதில், கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் லேசான காயங்களுடனும், மூன்று பேர் பலத்த காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.