சிவகங்கை: இந்த பண்டிகையை வஞ்சினிப்பட்டி கிராமத்தினர் அல்லாசாமி பண்டிகை என்றும் பூக்குழி திருவிழா என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். 10 நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
17ஆம் நூற்றாண்டில் இருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இந்த திருவிழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வஞ்சினிபட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையது முகைதீன் குடும்பத்தினா் இத்திருவிழாவை கிராமத்தினரோடு இணைந்து நடத்தி வருகின்றனா்.
இருப்பினும் 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சையதுமுகைதீன் குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் இத்திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. பின்பு கிராமத்தினர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சையதுமுகைதீன் குடும்பத்தினரை தேடி கண்டுபிடித்து அவரது மகன் சையதுமொய்நுதீன் மற்றும் அவரது சகோதரா்களை அழைத்து வந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதநல்லிணக்கத்தோடு இவ்விழாவை மீண்டும் நடத்தியுள்ளனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஊர் முழுவதும் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என அனைவரும் விருந்து வைத்து அசத்தினர். மாலை பூக்குழி வளா்க்கப்பட்டு சுவாமிக்கு பாத்தியா ஒதப்பட்டது. உள்ளூா் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமத்தைச் சோ்ந்தவா்களும் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து அல்லாவிடம் பாத்தியா ஒதி வழிபாடு நடத்தினர். பின்பு பக்தர்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியர்கள் பூசி விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டது. இதனையடுத்து மாலை 3 மணிக்கு கூடத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்பு அக்கிராமத்தில் அமைக்கப்பட்ட மிகப்பிரமாண்டமான பூக்குழியை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பிறகு பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்கினர்.
அப்போது பூக்குழிக்குள் இருந்த நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனர். அதன்பிறகு மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை தங்களது முந்தானையில் பெண்கள் வாங்கிச் சென்றனர். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த விழா பல தலைமுறைகளாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: தேவகோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத்திருவிழா நடத்த அனுமதி!