சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(60). இவர் சிவனூர் வேலாயுத சுவாமி கோயில் முன்பு நேற்று நின்று கொண்டிருந்தபோது திடீரென கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த முருகனை கிராம மக்கள் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 'சிவனூர் வேலாயுத சுவாமி கோயிலுக்கு உரிய உண்டியல் பணம், முடி காணிக்கை பணம், மாடு ஏல பணம், கோயில் மண்டப வாடகைப் பணம் ஆகியவற்றை ஒரு தரப்பினர் வசூல் செய்தும் முறையான கணக்கு காண்பிக்கவில்லை. இது குறித்து யார் கேட்டாலும் கோயில் பணம் வசூல் செய்யும் ஒரு தரப்பினர் பதில் கூறுவதில்லை. எனவே இந்த கோயில் பண வசூல் முறைகேடுகளைப் பற்றி முருகன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அதை சுமார் 100 ஜெராக்ஸ் எடுத்து கிராமத்தில் விநியோகம் செய்துவிட்டு கோயில் முன்பு தனது பிறப்புறுப்பை தானே கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்' என தெரிய வந்திருக்கிறது.