சிவகங்கை: தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் பழமையான தொல்லெச்சங்கள் பரவலாக பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பனங்குடிக் கண்மாய் பகுதி அருகிலுள்ள மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ஓடுகள் கிடைத்ததாகப் பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார், பாண்டியன், இளங்கோ, முத்தரசு ஆகியோர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் துணைச்செயலர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில் மேற்பரப்பு ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய்க் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது.
அப்பணிக்குப் பின்னர், அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் போது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் நாங்கள் அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம். இங்கு காணப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக கோர்வையாக அடுக்கி, படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பை ஏற்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற கழிவுநீர்க் குழாய் அமைப்புகள் சிந்து சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகின்றன என்றாலும், தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவுநீர்க் குழாய்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால், கீழடியில் கிடைக்கப்பெற்றவை சற்று வேறுபட்ட கழிவு நீர்க்குழாய்கள். கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க் குழாய்களைவிட, இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும் மாறுபட்டதாகவே தெரிகிறது.
வாழ்விடப் பகுதியை ஒட்டியே இடுகாட்டுப் பகுதி: பரந்து விரிந்து கிடக்கும் பானையோடுகள். பனங்குடி மயிலாடும் போக்கு கண்மாயை அடுத்து சுமார் 15 ஏக்கருக்கு பானை ஓடுகள் அதகளவில் கிடக்கின்றன. இதில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மேலும் வட்டச்சில் எச்சங்களை கண்டெடுத்தோம். இந்தப் பானை ஓடுகளைக் கொண்டும், குழாய் வடிவத்தில் கிடைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் பிற தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குழாய் அமைப்பைக் கொண்டும் இது வாழ்விடப் பகுதி என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களையும் காண முடிகிறது. அந்த கல் வட்ட எச்சங்களுக்கிடையே முதுமக்கள் தாழி பானை ஓடுகளும் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.
ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை: இவ்விடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும். இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் பேசிய பொழுது மாவட்ட நிர்வாகம் வழியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கிராம மக்களிடையே தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம்" எனக் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் விளக்கங்கள் குறித்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: Abdul Kalam Birth Anniversary: 92 அப்துல் கலாம் ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர்கள்!