சிவகங்கை: மின்சாரப் பற்றாக்குறையிலிருந்து தற்சார்பை நோக்கி நகர்வதற்கான உத்தியை இந்தியாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம் தான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்காய் ஊராட்சி.
உணவுக்கு பயன்பட்டது போக எஞ்சியுள்ளவற்றை வெறும் கழிவு என்று ஒதுக்காமல், அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளனர் இப்பகுதி மக்கள்.
மன் கி பாத்தில் இடம்பெற்ற சிவகங்கை மாவட்ட கிராமம்
இந்தியப் பிரதமரின் நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் காஞ்சிரங்கால் ஊராட்சியின் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி. இதனால் அக்கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவையே தலைநிமிர வைத்துள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி, பிரதமரின் பாராட்டு காரணமாக மேலும் உத்வேகம் பெற்றுள்ளது.
காஞ்சிரங்கால ஊராட்சி
புறநகரில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. கழிவு மற்றும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இக்கிராமம் தற்போது வெற்றியும் கண்டுள்ளது.
வளமாக்கப்படும் கழிவுகள்
வளமாக்கப்படும் கழிவுகள் என்ற தலைப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் 66 லட்சத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உயிர் எரிவாயு ஆலை நிறுவப்பட்டுள்ளது.
இதற்காக காஞ்சிரங்கால் கிராமம், சிவகங்கை நகர்ப்புறங்களில் சேகரிக்கப்படும் கோழி இறைச்சி, மீன் இறைச்சி, காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரித்து, கழிவுகளில் இருந்து வெளியேறும் மாசுக் கட்டுப்பாட்டை குறைத்து, மின்சார உற்பத்தியை தொடங்கியுள்ளனர் சிவகங்கை ஊரக வளர்ச்சி துறையினர்.
மேலும், இந்த ஆலையின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்தல், கரிம மேலாண்மையை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
நாள் ஒன்றுக்கு 2 டன் கழிவிலிருந்து மின்சாரம்
உணவுக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஊராட்சியின் மின் செலவினம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவு ஆலையின் மூலமாக ஒவ்வொரு நாளும் இரண்டு டன் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சேகரிக்கப்படும் கழிவுகள் நீருடன் கலந்து தொட்டியில் ஊற்றி அரைக்கப்பட்டு வெளியேறும் வாயுவின் மூலம் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதாக பொறியாளர்கள் கூறுகின்றனர். மின்சாரம் தயாரிப்பிற்கு பின் மிஞ்சும் நீர் விவசாயத்திற்கு இயற்கை உரமாகவும் பயன்படுவதால் விவசாயிகள் ஆர்வமுடன் வந்து நீரை பெற்றுச் செல்கின்றனர்.
விரைவில் மாவட்டமே மின்சார தன்னிறைவு பெறும்
இந்த ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்பட்சத்தில் ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டமே மின்சாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறும் எனவும் பெருமையுடன் கூறுகின்றனர் ஊரக வளர்ச்சித் துறையினர். தற்போது பிரதமரும் இத்திட்டத்தை தன்னுடைய உரையில் வரவேற்று பாராட்டி இருப்பது, சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்: பிரதமர் மோடி வாழ்த்து