சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், தெப்பக்குளம் மேல்கரை அருகில் இயற்கை உழவர் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஆவாரை ஊர்ச்சந்தை நேற்று நடைபெற்றது.
உழவு, உழவர், நுகர்வோர் மீது அக்கறை கொண்டுசெயல்படும் இந்தச் சந்தை மாதத்தின் முதல் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் காளையார்கோயில் பகுதியில் நடைபெறும்.
இது தொடர்பாக இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினர் கிருஷ்ணவேணி கூறுகையில், "மரபு வழி வேளாண்மையை முன்னெடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு இயங்கிவரும் ஆவாரை ஊர்ச்சந்தை உழவருக்கும் நுகர்வோருக்கும் உறவுப் பாலமாக இயங்கிவருகிறது. 'ஆவாரை இருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப தொடங்கப்பட்டதுதான் ஆவாரை சந்தை.
இயற்கை வழி வேளாண்மையைப் பரப்புரை செய்வது, உழவர்கள் விளைவித்த பொருள்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனையாகச் செய்திட களம் அமைத்து கொடுப்பது, நஞ்சில்லா உணவை பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பது, இயற்கை வழி வேளாண்மை குறித்து பயிற்சி அளிப்பது, சிறுதானிய உற்பத்தியைப் பெருக்குவது, நாட்டு மாடுகள், எருமை பால் கூட்டுறவு முறையில் கிராமத்துக்குள் தன்னிறைவு, காய்கறி - வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டப் பயிற்சி, மரபு விதைகள் பெருக்கம் போன்ற நோக்கங்களுக்காக இந்தச் சந்தை நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.