சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வுப் பணிகள் செய்யப்பட்டன. இதில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டையத் தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டையத் தமிழர்களின் கட்டட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் எனப் பலப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி கீழடியில் தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் பணிகள் தொடங்கப்பட்ட ஒருவார காலத்தில் அங்குள்ள நான்கு அகழாய்வுக் குழிகளில் ஆய்வுப்பணியின்போது, ஏராளமான பண்டைய கால ஓடுகளும், பானைகளும் கிடைக்கப்பெற்றன. பின்னர் விரைவில் ஆறாம் கட்ட அகழாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு ஜனவரி மாதம் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்