சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஆதம் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் உடன் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுடன் இணைந்து உணவு அருந்திய பின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சொத்து வரி உயர்வு என்பதை மக்கள் பாதிக்கப்படாமல் மறு சீராய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
ரஷ்யா உக்ரைன் மேல் தாக்குதல் நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், ரஷ்யாவிடம் சில நியாயங்கள் உள்ளன. பல காலமாக நமக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான ராஜாங்க உறவைப் பாதுகாக்க உக்ரைன் பிரச்னையில் இந்தியா நடுநிலை வகிக்தே ஆக வேண்டும். இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும். ஆனால், அந்த உதவி நம்முடைய மேற்பார்வையில் இருக்க வேண்டும்.
இளையராஜா மீது நான் பெரு மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் அவரது கருத்தைச் சொல்லி உள்ளார். ஆனால் மோடியையும் அம்பேத்கரையும் ஒன்றாக ஒப்பிடுவது எனக்குப் பொருத்தமாகப்படவில்லை. அம்பேத்கர் பெரிய படித்த மேதை. அவர் ஒரு சமுதாயத் தலைவர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று மட்டுமே பார்க்கக்கூடாது.
இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் அம்பேத்கருக்குத் தான் பெரும் பங்கு உண்டு. அவர் பெரும் படித்த மேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது அந்த மேதைக்கு நல்லது அல்ல. அதிமுக தொண்டர்கள் வாக்குவங்கி உள்ள அரசியல் கட்சிதான், இருந்தபோதும் செயல்பட முடியாத தலைமையால் அது தடுமாறி நிற்கிறது" என்று தெரிவித்தார்.