சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாங்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி ஆதரவாளர்கள் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து கிடக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் குறித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி உயிரோட்டமாக இருப்பதை அது காட்டுகிறது எனவும் அனைத்தையும் சமாளித்து செல்வதுதான் காங்கிரஸ் கட்சி எனவும் பதிலளித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுமே காரணம் எனவும், ஒன்றிய அரசுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்க தயாராக இருந்தாலும், கேட்கும் இடத்தில் ஒன்றிய அரசு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் காங்கிரஸ் உட்கட்சி பூசல் - கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதல்